ரூ.3000 பொங்கல் பரிசு தொகுப்பு – தமிழக அரசு
தமிழ்நாடு அரசு வழங்கும், மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க மேலும் ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகுப்பு இன்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுநீளக் கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தொகையும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜனவரி 8 முதல் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற செவ்வாய் கிழமை கடைசி நாள் என்ற நிலையில் இதுவரை 2 கோடியே 4 லட்சம் பேர் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விடுபட்டவர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் மேலும் ஒரு நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்றும் வழங்கப்பட உள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். உடனடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.





