சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணிக்கலாமா…? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று தீவிரத்தைத் தடுக்க முடிவெடுத்த மத்திய அரசு 2ம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. அந்த ஊரடங்கு இன்னும் சில நாட்களில் நிறைவுக்கு வருகிறது.
இந்த உத்தரவு காரணமாக வெளி மாநிலத்தில் கல்வி கற்று வந்தவர்கள், சுற்றுலா சென்றவர்கள், கூலி வேலைக்குச் சென்றவர்கள், பக்தர்கள் உள்படப் பலர் பாதிக்கப்பட்டனர். வெளி மாநிலங்களுக்குச் சென்று சிக்கிக் கொண்டவர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
அவர்களுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அப்படிச் சிக்கிக் கொண்டவர்கள் குறித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அந்த உத்தரவில் பிற மாநிலங்களில் தவித்து வரும் மக்களை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒத்துழைப்பு இருந்தால் போக்குவரத்து ஏற்பாடு செய்து மீட்டுச் செல்லலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்போது இது தொடர்பாகத் தெளிவான முடிவெடுத்து மத்திய அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க பேரிடர் மீட்பு சட்டத்தின் அடிப்படையில் சில முடிவுகளை அரசு எடுத்துள்ளது.
பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்வே அமைச்சகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டண விவரம், டிக்கெட் விற்பனை, தனி மனித இடைவெளி, ரயிலின் நேரம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






