இன்று தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி..!
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக, தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டதோடு, பெருஞ்சேரி பகுதியில் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 12 மணியளவில் பரப்புரை மேடைக்கு வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதையடுத்து, பிற்பகல் ஒன்றரை மணி அளவில் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பாண்டியநல்லூர் பகுதியிலும், மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியிலும் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளார்.





