ஹோர்மூஸ் நீரிணை திறப்பு.. குறைகிறது எல்பிஜி சிலிண்டர் விலை..!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் கூட்டாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டுமென இந்தியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. இதனிடையே, ஈரான் – அமெரிக்கா இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலான நிலையில், ஈரானுக்கு ஆதரவு அளித்த லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பத்து நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த சூழலில், இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் வரை ஹோர்மூஸ் நீரிணை முழுவதுமாக திறக்கப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அபாஸ் அராக்சி அறிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா தனது பெரும்பாலான எல்பிஜி தேவைகளுக்கு இறக்குமதியையே சார்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், விநியோகம் தாமதமானது மட்டுமல்லாமல், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் விநியோக நிறுவனங்கள் குறைந்த கையிருப்புடன் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறையுமா? ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்ட உடனேயே எரிவாயு விலைகள் குறையும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. காரணம், ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் கூட, எல்பிஜி விநியோகம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்புவது என்பது சற்று கடினம். கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு உற்பத்தி நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தத் தாக்குதல்களால் கத்தாரின் மொத்த எல்என்ஜி ஏற்றுமதித் திறனில் சுமார் 17 சதவீதம் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சேதமடைந்த உள்கட்டமைப்பைச் சரிசெய்ய 3 முதல் 5 ஆண்டுகள் ஆகக்கூடும். இது ஒவ்வொரு ஆண்டும் உலக சந்தையில் சுமார் 12.8 மில்லியன் டன் எல்என்ஜி பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா கத்தாரிலிருந்துதான் அதிக அளவு இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது, உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் மீதான அழுத்தத்தை ஓரளவு குறைக்கக்கூடும். கப்பல் வழித்தடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பலாம். பயண நேரம் குறைவதோடு, காப்பீட்டுச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது. மாற்று வழிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவும் குறையும்.
இது இந்திய எரிசக்தி நிறுவனங்களின் இறக்குமதிச் செலவுகளைக் குறைத்து, உள்நாட்டு எரிசக்தி விலைகள் மீதான அழுத்தத்தை ஓரளவிற்குத் தணிக்கும். இந்திய இறக்குமதியாளர்களுக்கு மீண்டும் பரந்த அளவிலான தேர்வுகள் கிடைக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து சிறந்த நிபந்தனைகளில் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பும் உருவாகும்.





