தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை..!
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும், கேரளம் மற்றும் தென்கிழக்கு பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரியலூர், மாவட்டத்தின் பொய்யாதநல்லூர், ராயம்புரம், செந்துறை, உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தருமபுரியில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காவேரிப்பட்டினம், பர்கூர், ஆலப்பட்டி, குந்தாரப்பள்ளி, வேப்பனஹள்ளி, மேலுமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதோடு, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





