இன்று தமிழகம் வரும் பிரதமர்..!
கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 18 மணிநேரம் தியானத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி, கன்னியாகுமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் தியானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, 3ஆவது முறையாக போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார்.
விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் மூலம், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு இன்று மாலை 4.35 மணிக்கு வந்தடைகிறார்.சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மாலை 4:45 மணிக்கு அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து, பூம்புகார் படகு குழாமிற்கு செல்லும் பிரதமர், தனிப்படகு மூலம் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையில் ஸ்ரீபாதம் மண்டபத்தில் தரிசனம் மேற்கொள்கிறார். மேலும், விவேகானந்தர் வெண்கல சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்.





