--- --:--:-- --

முதல்வரின் தாயை விமர்சிப்பதா? தாராபுரம் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

PM

முதலமைச்சரின் தாயையே திமுகவின் 2ஜி ஏவுகணை விமர்சித்து பேசுவதா? பெண்களை இழிவுப்படுத்திய திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை என்று, தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

 

வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தமிழக பாஜக தலைவர் முருகன், தாராபுரத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று பகல் தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:

 

தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது நோக்கம் வளர்ச்சி குறித்தது. ஆனால், காங்கிரஸ் – திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல் செய்வதுதான். காங்கிரஸ், திமுக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

 

அண்மையில் 2ஜி புகழ் ஏவுகணை (ஆ. ராசா) ஒருவர், முதல்வரின் தாயை அவமதித்து பேசினார். முதலமைச்சரின் தாயையே விமர்சித்து பேசுவதா? லியோனி, பெண்களை மிக மோசமாக விமர்சனம் செய்தார். திமுகவின் இளவரசர் (உதயநிதி) ,பெண்களை கேவலமாக விமர்சனம் செய்தார்.

 

சட்டசபையில் திமுகவினரால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை.இவ்வாறு திமுகவினர் தொடர்ந்து பெண்களை இழிவுப்படுத்தி வந்ததை, திமுக தலைவர்களை கட்சி தலைமை கண்டிக்கவில்லை. கட்சிகள் தங்களது தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.

 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம். தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். கொங்கு மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். எளிதாக தொழில் தொடங்க பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம்.

 

உழவர்களை உலகம் பின்பற்ற வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. சிறு விவசாயிகளின் நலன்களை காப்பதே மத்திய அரசின் நோக்கம். பல்வேறு திட்டங்களின் மூலம் சிறு விவசாயிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார்.

 

இந்த கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு வேல் பரிசாக அளிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர்கள், பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தாமக தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Right Menu Icon