பிரதமரின் உழைப்பால் இந்தியா உயர்ந்துள்ளது: முதல்வர் பழனிச்சாமி
பிரதமர் நரேந்திர மோடியின் கடின உழைப்பால் உலக அளவில் இந்தியா உயர்ந்துள்ளது; இதற்கான பெருமை அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருநாள் பயணமாக இன்று தாராபுரம் வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற தேசிய ஜனநாயகக்கூட்டணி பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ் கட்சி. அந்த கட்சியின் ஆட்சியால், ஒட்டுமொத்த நாடும் பின்னோக்கிச் சென்றது. ஆனால், மோடி ஆட்சியில் நாடு முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வரக் காரணமாக இருந்ததே காங்கிஸ் – திமுக கூட்டணிதான். ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. தமிழகத்தைப் பொருத்தவரை நரேந்திர மோடிதான் ஜல்லிக்கட்டு நாயகன். அனைவருக்கும் வீடு என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று பேசினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, எப்போதும் தமிழக மக்களின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.சாலை பணி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தடையில்லா மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பால் முதலீடுகள் தமிழகத்தில் குவிந்து வருகின்றன.
ரூ.1125 கோடி மதிப்பில் திருப்பூரில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எண்ணற்ற பல திட்டங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு மத்திய அரசின் ஆதரவு மிக முக்கியமானது. பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா உயர்ந்துள்ளது; பெருமை அடைந்துள்ளது” என்று பேசினார்.





