மின்கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை – 29ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!
மின்கட்டணம் நிர்ணயத்தில் எந்த விதி மீறலும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மின் கணக்கீடு செய்ததால் வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாட்டை கணக்கிட்டு முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்துவிட்டு மீதத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை சேர்த்து பில் போடுவதால் 14 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரும் என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதி மீறலும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மின்சார கட்டண நிர்ணயம் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டிருந்தது. மின் அளவீடு பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலேயே தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும் இது விதி மீறிய செயல் அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .மேலும் அரசு தரப்பில் வாதிட்ட அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கை 29ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






