நாட்டில் விரைவில் வீசும் புயலில் மோடி அடித்துச் செல்லப்படுவார் – ராகுல் காந்தி
கோவைக்கு வரவேண்டிய ரூ.6,000 கோடி முதலீட்டை மிரட்டி குஜராத்துக்கு மத்திய பாஜக அரசு கொண்டு சென்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை செட்டிபாளையத்தில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது, ராகுல் காந்திக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புத்தகங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து, உரையைத் தொடங்கிய முதல்வர் ஸ்டாலின், 2024 மக்களவைத் தேர்தலின் “ஹீரோ” காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் என்று புகழாரம் சூட்டினார். மேலும் ராகுல் காந்தி வருக.. புதிய இந்தியாவுக்கு விடியல் தருக எனவும் அறைகூவல் விடுத்தார். கோவைக்கு வரவிருந்த ரூ.6,000 கோடி முதலீட்டை மிரட்டி, குஜராத்துக்கு மத்திய பாஜக அரசு கொண்டு சென்றதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கோவையின் மீதான பாஜகவின் பாசம் போலியானது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சாடினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை மக்களின் சுருக்குப்பையில் இருந்த பணத்தையும் பாஜக பறித்ததாகவும், ஜிஎஸ்டி-யால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார்.
அதிமுகவைப் பொறுத்தவரை யார் ஆளவேண்டும், யார் ஆளக்கூடாது என்றும் சொல்லாமல் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதாக சாடினார். யார் தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தர தேர்தல் களத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கான அரசு ஒப்பந்தங்களை அளித்து, அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் பெற்றதாக சாடினார். தேர்தல் பத்திர திட்டத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், நாட்டில் விரைவில் ஒரு புயல் வீச இருப்பதாகவும், அதில் பிரதமர் மோடி அடித்துச் செல்லப்படுவார் எனவும் ராகுல் சூளுரைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணன் என கூறிய ராகுல் காந்தி, நீட் தேர்வு குறித்து மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ள வழிவகை செய்யப்படும் எனவும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் எனவும் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.





