கொரொனா பரவலை தடுக்க கால் விரலில் இயக்கக் கூடிய லிப்ட் அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்!
மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்விரல்கள் மூலமாக இயங்கக்கூடிய லிப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஊரடங்கும் முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கலாம் என்று அரசு அறிவித்தால் அதற்கு அனுமதி கொடுக்கப் பட்டால் மெட்ரோ ரயில் சேவை கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்குவதற்கு ஏதுவான பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது.
தொடர்ச்சியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது பயணிகளுக்கு கொரொனா குறித்த விழிப்புணர்வு மற்றும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரயில் நிலையத்தில் வரக்கூடிய பயணிகள் அனைவருக்கும் மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் டிக்கெட் வழங்குவதற்கு பதிலாக முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் ரயிலில் குறைந்தபட்ச ஆட்களை மட்டுமே பயணிக்க வைத்து கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு பேர் பயணிக்க வேண்டிய ஒரு ரயிலில் 160 பேர் மட்டுமே இனி பயணிப்பார்கள். இந்த நிலையில் இம்மாதிரியான பல நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில் இப்பொழுது மேலும் ஒரு முக்கியமான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதாவது இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் காலில் லிப்ட் பட்டன்களை அழுத்தும் வசதியை துவக்கியுள்ளனர். லிப்ட் பட்டன்களை கைகளால் தொடுவதன் மூலமாக கொரொனா பரவலாம் என்பதனால் மெட்ரோ நிர்வாகம் இதை மேற்கொண்டுள்ளது.
கோயம்பேடு நிலையத்தில் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வசதி தொடர்ச்சியாக அடுத்த கட்டமாக விரைவில் அனைத்து நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்த உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.






