--- --:--:-- --

அவிநாசியில் கோயில் மண்டபத்தில் “இந்து முன்னணி” பயிற்சி வகுப்பு…! அனுமதி கொடுத்தது எப்படி? வலுக்கும் எதிர்ப்பு..! மழுப்பும் அதிகாரி!!

fdh

அவிநாசியில் உள்ள புராதனமான லிங்கேஸ்வரர் திருக்கோயிலின் மண்டபத்தில், இந்து முன்னணி சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியதுடன், அந்த நிகழ்ச்சியில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்களை தூண்டி விடும் வகையில் பேசியதும் பெரும் சர்ச்சையாகியுள்ளது. பொதுவான கோயில் மண்டபத்தில் ஆன்மீகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில், சட்ட விரோதமாக அரசியல் வகுப்பெடுக்க அனுமதித்தது எப்படி? என பல தரப்பிலும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழ, கோயில் நிர்வாக அதிகாரியோ மழுப்பலாக பதிலளித்துள்ளது பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற லிங்கேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு சொந்தமான கருணாம்பிகை மண்டபமும், கலையரங்கமும் கோயிலை ஒட்டியே அமைந்துள்ளது. இங்கு ஆன்மீக சொற்பொழிகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் தனியாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படுவது தான் நடைமுறை. அரசியல், மதம் சார்ந்த அமைப்புகளின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.

 

இந்த வழக்கத்துக்கு மாறாக இந்து அமைப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு, முன்னர் இருந்த கோயில் நிர்வாக அதிகாரி தொடர்ந்து அனுமதி வழங்கியதால் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு காட்டினர். இதனால் சர்ச்சை எழுந்தது. பின்னர் சமாதானம் பேசிய அந்த அதிகாரி, இனிமேல் தனிப்பட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க மாட்டாது என உறுதியளித்திருந்தார். இந்திலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த அதிகாரி மாறுதலாகி புதிய நிர்வாக அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த கோயில் மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில், நேற்று மாலை இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியது சர்ச்சையாகி உள்ளது. இந்து முன்னணி தலைவரின் படத்தை வைத்து, கொடிகளையும் கட்டி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே இளைஞர்கள் தான். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் நாடே கொந்தளிப்பில் உள்ள சூழலில், இந்தக் கூட்டத்தில் சிஏஏக்கு ஆதரவான கருத்துக்களை இளைஞர்களிடம் எடுத்துரைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இப்படி விதிக்கு புறம்பாக இந்து முன்னணி கூட்டம் நடத்த அனுமதித்தது எப்படி? என கோயில் நிர்வாக அதிகாரியிடம் அவிநாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் இளைஞரணி தலைவர் சாய்கண்ணன் கேள்வி எழுப்பியதற்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால், அதிகாரியின் போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக சாய் கண்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஏஏ-க்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு நிலவுகிறது.

 

கோயில் மண்டபத்துக்கு எதிரில் மசூதியும் உள்ள நிலையில், இந்து முன்னணியினர் இப்படி பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களை தூண்டினால் மோதல் உருவாகும் சூழலை ஏற்படுத்தி அவிநாசியில் பதற்றத்தை உருவாக்கப் பார்ப்பதா? எனவும் சாய் கண்ணன் கொந்தளித்துள்ளார்.

இதற்கிடையே, விதிக்கு புறம்பாக கோயில் மண்டபத்தில் இப்படி கூட்டம் நடத்த இந்து முன்னணியினருக்கு அனுமதி வழங்கிய ஏன்? என கோயில் செயல் அதிகாரி லோக நாதனிடம் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு மழுப்பலாக பதிலளித்த லோகநாதன், மீட்டிங் நடத்த அனுமதித்தோம். ஆனால் என்ன மீட்டிங் நடந்தது என தெரியாது. கூட்டம் நடத்தியவர்களும் அரசியல் கட்சியினர் கிடையாது. கூட்டம் நடந்ததால இப்ப என்ன ஆகிப் போச்சு? என்றார்.

 

அப்போ யார் எந்த கூட்டம் நடத்த அனுமதி கொடுத்து விடுவீர்களா? கோயில் புனிதத்தை கெடுப்பதா? என வழக்கறிஞர் கோபமாக கேட்க, மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை பாடினார் கோயில் அதிகாரி லோகநாதன். இதனால் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆவேசமாக குரல் எழுப்பியதால், தாம் தவறு செய்து விட்டோம் என்பதை அறிந்த கோயில் அதிகாரியோ சரி, சரி பார்த்துக்கலாம் என பின் வாங்குவது போல மழுப்ப ஆரம்பித்தார்.

 

கோயில் மண்டபத்தை இந்து முன்னணியினரின் கூட்டத்துக்கு, அதுவும் இளைஞர்களை சிஏஏ-க்கு ஆதரவாக துண்டிவிடும் பயிற்சி வகுப்புக்கு அனுமதி கொடுத்த விவகாரம் அவிநாசியில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அனுமதி கொடுத்த கோயில் செயல் அதிகாரிக்கு எதிராக பல தரப்பிலும் கண்டனக் குரல்களும் எழுந்து வருவதால் இந்த விவகாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon