தகராறில் கூலித்தொழிலாளியின் காதைக் கடித்தவர் கைது..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஊர் பஞ்சாயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூலித் தொழிலாளியின் காதை கடித்த மற்றொரு நபர் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம் அருகே ஊராட்சியை சேர்ந்த சிவகுமார் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். இருவரும் ஒன்றாக வீடு திரும்பும்போது சந்துருவுக்கும் சிவ குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறுகிறது.
பின்னர் முக்கியஸ்தர்களிடம் இதுபற்றி தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளனர்.. தொடர்ந்து ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த சந்துரு சிவக்குமாரின் வலதுபக்க காதை கடித்து துப்பியுள்ளார்.
இதைப்பார்த்த சிவகுமாரின் உறவினர் கார்த்திகேயன் சந்துருவை தடுக்க முயன்றபோது அவர் அருகிலிருந்த கட்டையைக் கொண்டு கார்த்திகேயனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். ஊர் முக்கியஸ்தர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






