ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியாகியுள்ளது..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை வருவாய் கோட்டாட்சியர் நாளை ஆட்சியரிடம் தாக்கல் செய்கிறார்.
கடந்த 16ஆம் தேதி நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற விராட்டிபத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் முன்பதிவு செய்யாமல் ஹரிகிருஷ்ணன் என்பவரது 33வது எண் கொண்ட பனியனை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் அன்பழகன் கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டார்.
முன்பதிவு ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவு ஆகியவற்றின் மூலம் வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் நடத்திய விசாரணையில் முதல் பரிசு பெற்ற கண்ணன் மாடிப்பிடி வீரர்களுக்கான முன்பதிவு செய்யாமல் களத்தில் விளையாடியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் பரிசு யாருக்கு வழங்குவது என்பதை கமிட்டி முடிவு செய்யும் எனவும் விசாரணை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் வருவாய்க் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.






