கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன. நீட் தேர்வு, நெல் கொள்முதல் விவகாரம், மணல் கொள்ளை, அதிமுக- திமுக டீலிங் என பல விஷயங்களை கையில் எடுத்து ஆளுங்கட்சியை விஜய் ஒரு பிடிபிடித்தார்.
தமிழ்நாட்டுக்கு சோறு போடும் தஞ்சை மண்ணின் வாசம் கமழும் செங்கிப்பட்டியில், புதன்கிழமை அன்று கூடியிருந்த அந்த மக்கள் கூட்டம் ஏதோ ஒரு சினிமா விழாவிற்கு வந்தவர்கள் போலத் தெரியவில்லை. ஒரு பெரும் அரசியல் மாற்றத்தின் மௌன சாட்சிகளாக அவர்கள் காத்திருந்தனர். வேன் மீது ஏறி ‘எண்ட்ரி’ கொடுத்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
கழுத்தில் பளிச்செனத் தெரிந்த அந்தப் பச்சைத் துண்டு, விஜய் அங்கு பேசப்போவது விவசாயிகளின் வலியையும், ஆளுங்கட்சியின் மீதான தன் கோபத்தையும் தான் என்பதற்கு அச்சாரமாக அமைந்தது. மைக் பிடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, கோட்டையை நோக்கி அவர் வீசிய வார்த்தை ஏவுகணைகள் ஒவ்வொன்றும் ‘சிக்ஸர்’ ரகம்.

“தமிழ்நாட்டின் மக்களின் ஒரே பிரதிநிதியாக நாம் மட்டும்தான் இருக்கிறோம்” என்று தொடங்கியபோதே அரங்கம் அதிரத் தொடங்கியது. “விஜய் vs ஸ்டாலின் சார்” என நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டு அவர் மோதிய விதம், இதுவரை அலைகளாக இருந்த தவெக-வின் அரசியலை ஒரு பெரும் சுனாமியாக மாற்றியது.
“சென்னையில டெல்லி, டெல்லி-ன்னு பேசிட்டு அங்கே போய் வெள்ளை குடை பிடிக்கிறது யார்னு மக்களுக்குத் தெரியும்” என்று அவர் சொன்னபோது, திமுக-வின் இரட்டை நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டினார். “ஓம்சக்தி, பராசக்தி… திமுக ஒரு தீயசக்தி-ன்னு இப்போ சின்னக் குழந்தைகூடச் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு” என அவர் போகிற போக்கில் அடித்துவிட்டது, அறிவாலயத் தரப்பை உசுப்பிவிட்டிருக்கிறது.
விவசாயிகள் மீதான தன் பாசத்தை வெளிப்படுத்திய விஜய், “அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்” என்று சொன்னபோது உணர்ச்சிவசப்பட்டது அந்தச் தஞ்சை மண். ஆனால், அடுத்த நொடியே அரசியலுக்குத் திரும்பிய அவர், “நானும் டெல்டாகாரன் என்று சொல்லி மார் தட்டிக்க மாட்டேன்… டெல்டாகாரன்னு சொல்லிக்கிற நீங்க, மழையில நனைஞ்சு வீணாப்போன நெல்லைக் கவனிச்சீங்களா?” என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி நேரடி அட்டாக் கொடுத்தார்.
மணல் மாஃபியாக்களுக்கு இந்த அரசுதான் ஆதரவு அளிக்கிறது என்பதைப் போட்டு உடைத்த விஜய், “இது இல்லன்னு உங்களால சொல்ல முடியுமா?” என்று சவால் விடுத்த விதம், பலரையும் சிந்திக்க வைத்தது. விஜய்யின் பேச்சில் மிக முக்கியமான ஹைலைட், அவர் முன்வைத்த அந்த ‘சதித் திட்டம்’ பற்றிய குற்றச்சாட்டுதான்.
“நான் இல்லன்னா நீ… நீ இல்லன்னா நான்… நமக்குள்ள வேற எவனும் நடுவுல வந்துடக் கூடாதுன்னு திமுக-அதிமுக இடையே ஒரு பெரிய டீலிங் இருக்கு” என்று அவர் சொன்னபோது தமிழக அரசியலின் இரு துருவ அரசியலை ஒரே அடியில் சாய்த்தார். ஊரார் வீட்டு நெய்யில் தன் வீட்டுச் சுவீட் செய்ய வேண்டாம் என அவர் கிண்டலடித்தது, அரசு விளம்பரங்களுக்காக, கருணாநிதி சிலைக்காக செலவிடும் நிதியைப் பற்றிய விமர்சனமாகவே பார்க்கப்பட்டது. நிதிச் சுமை என்று காரணம் சொல்லிக்கொண்டே, சிலைகள் வைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது என்ற அவரது கேள்வி சாமானியனின் குரலாக ஒலித்தது.
தனது தேர்தல் வாக்குறுதிகளையும் இதே மேடையில் அதிரடியாக அறிவித்தார் விஜய்; விவசாயிகளுக்காகப் பெரும் சலுகைகளை அடுக்கினார். “ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் மற்றும் 50 சதவீத நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இரண்டு ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்” என அவர் அறிவித்தபோது டெல்டா விவசாயிகள் மத்தியிலிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. “ஆட்சி முடியும்போது கல் நடுவதை விட்டுவிட்டு, வந்தவுடனேயே வேலைகளைச் செய்யத் துணிவு வேண்டும்” என்று ஆளுங்கட்சியின் தேர்தல் யுக்திகளைச் சீண்டினார்.
மீனவர்கள் விவகாரத்தில், “மானே… தேனே… பொன்மானே…” பாணியில் கடிதம் மட்டும் எழுதுவதை விட்டுவிட்டு, அவர்களின் பாதுகாப்பிற்காக உருப்படியாக வேலை செய்ய வேண்டும் என்று விளாசினார். “இந்த விஜய்யை நீங்கள் முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜய்யை முடக்க முடியாது” என்று அவர் கர்ஜித்தபோது, அது வெறும் சினிமா வசனமாகத் தெரியவில்லை; ஒரு கட்சியின் தலைவனாக அவர் எடுத்திருக்கும் விஸ்வரூபமாகத் தெரிந்தது.
விஜய்யின் இந்தத் தஞ்சை வருகையும், தங்குதடையின்றி அவர் முன்வைத்த காட்டமான விமர்சனங்களும் நிச்சயம் ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று அவர் வைத்த ‘பஞ்ச்’, திமுக அரசுக்கு விடுக்கப்பட்ட ஒரு பகிரங்க எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. தளபதியின் இந்த அரசியல் ஆட்டம், வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.






