“இறுதியில் வென்றது சமூக நீதி!!” 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!!
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பிறகு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இறுதியில் வென்றது சமூக நீதி.. எப்போதும் வெல்லும் சமூக நீதி.. என்று கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்தது பெரும் சர்ச்சையானது. இதனால் ஆளுநரின் ஒப்புதலின்றி தமிழக அரசே நேற்று அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், இன்று இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கருத்தைக் கேட்ட பின்பு ஒப்புதல் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு, 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வு நடத்துவதற்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில், வேறு வழியில்லாமல் ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
தி.மு.க. நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆளுநருக்கு உளப்பூர்வமாக முன்வைத்த வேண்டுகோள்களும், ஆளுநரின் மனமாற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. காரணம் என்னவாக இருந்தாலும் இறுதியில் வென்றது சமூகநீதி! எப்போதும் வெல்லும் சமூகநீதி!! என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.





