’இந்தி தெரியாது போடா’! தமிழகம் கொதிக்குது சூடா!! பொதுமக்களை உசுப்பேற்றும் அரசியல் கட்சிகள்… தேர்தலை வைத்து நடக்கும் கண்ணாமூச்சிகள்…
மொழி
தமிழ் திரைப்படத்துறையினர், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமுடன் டி-சர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தது, சமூக வலைதளங்களில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதை மனதில் கொண்டு இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு கிளப்பி வருகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் இந்தி மொழிக்கு எதிரான ஆவேச அலை வீசத் தொடங்கி இருக்கிறது. கொஞ்ச நாட்களாக அடங்கிக்கிடந்த இந்த விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்ட பெருமை, திமுக எம்.பி. கனிமொழியையே சேரும். அண்மையில் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். பெண் ஒருவர், ”உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியரா?” என்று தன்னிடம் கேள்வி எழுப்பியதாக, கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்தனர்.
தமிழர்கள் கொந்தளிபு
இந்த சர்ச்சை முடிவதற்குள் இன்னொன்று கிளம்பியது. கடந்த ஆகஸ்ட்18ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா, இந்தியில் உரையாற்றினார். தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் சிலர், ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டனர். ஆனால் அவரோ, தமக்கு ஆங்கிலம் சரளமாக பேச வராது; எனவே, இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றார். இதுவும், தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகரித்தன.
எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், தனது பங்கிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது நினைவு கூர்ந்து பேட்டி அளித்தார். டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு இந்தி தெரியாததால் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாக, அவர் கூறியிருந்தார். இது எல்லாமுகாக சேர்ந்து, தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிராக மீண்டும் சூடு பறக்கும் விவாதங்களை கிளப்பி விட்டுள்ளன.
’இந்தி தெரியாது போடா’
வெற்றிமாறனுக்கு ஆதரவாக, ’நான் தமிழ் பேசும் இந்தியன்’ என்றும் ’இந்தி தெரியாது போடா’ என்றும் வாசகங்கள் இடம் பெற்ற டி-ஷர்ட்டுகளை அணிந்தவாறு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட படம், காட்டுத்தீயாக சமூக வலைதளங்களில் வைரலானது.
நடிகர் பாக்கியராஜின் மகன் நடிகர் சாந்தனு, அவரது மனைவி கிருத்திகா இருவரும், ’I am a தமிழ் பேசும் indian’, எனவும், ’இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டை அணிந்து புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டனர்.
இதையடுத்து, நெட்டிசன்கள் இந்த டி-ஷர்ட்டுகள் அணிந்த போட்டோவை அதிகளவில் பகிரத் தொடங்கினர். ’இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேகும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளாமானோர் இதேபோன்று வாசகத்துடன் டிஷர்ட் அணிந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில், “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று, தீ அணையாமல் பார்த்துக் கொண்டார்.
முட்டல் மோதல்
அதேநேரம், பாஜக ஆதரவாளர்கள், இதற்கெல்லாம் சற்றும் சளைக்காமல் பதிலடி தரத் தொடங்கினர். “திமுக வேண்டாம் போடா” என்றும், “இந்தி கற்றால் தமிழ் அழியாது, திமுகதான் அழியும்” என்றும் சமூக வலைதளங்களில் சூடாக பதில் தரத் தொடங்கினர். அத்துடன், திமுகவினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இந்தி கற்பிக்கப்படவில்லையா? திமுகவினரே, தேர்தல் நடத்தில் இந்தி மொழியில் சுவரொட்டி தயாரித்து வாக்கு கேட்கவில்லையா என்றெல்லாம் கேள்வி எழுப்ப, வலைதளங்களில் இன்னமும் இந்தி எதிர்ப்பாளர்கள் – ஆதரவாளர்கள் இடையே முட்டல் மோதல் காராச்சாரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆளும் அரசுகளுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனைகளை உருவாக்கி மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் தருணம். இந்த நேரத்தில் சரியாக இந்தி மொழி சர்ச்சை கிடைக்க, திமுக அதில் கையில் எடுத்துக் கொண்டது.

ஆனால், ஆளும் அதிமுகவோ, தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும்; இந்தியை ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக ஒரே போடு போட்டதால், இந்தி எதிர்ப்பு என்பதால் கிடைக்கும் மொத்த பலனும் திமுக மட்டுமே அறுவடை செய்ய முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
மொழியாகட்டும் அல்லது வேறு எதுவுமே, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்போது இயல்பாகவே அதன் வெறுப்பு ஏற்படுவது சகஜமானது. ஒருசிலர், அரசியல் லாபத்திற்காக இந்தி மொழி விவகாரத்தை கையில் எடுத்து அதை பூதாகரமாக்கி குளிர் காய்கின்றனர். தீவிர இந்தி மொழிப் பற்றாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், இந்தியை திணிக்க முயன்று, மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்பை உருவாக்குகின்றனர்.
“அறிவையும் தகுதியையும் வளர்த்துக் கொள்வதில் தவறில்லை”
இந்தியாவில் அதிகப்படியாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்று, இந்தி; பல மாநிலங்களில் அது பேசப்பட்டு வருகிறது. ஆந்திராவை தாண்டிவிட்டால் வடக்கே இந்தி தெரிந்தால்தான் நம்மால் அங்கு சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இந்தி படித்த பல ஆயிரக்கணக்கானவர்கள், நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
இன்றைய நவீன யுகத்தில் கூடுதலாக மொழிகளை கற்று நமது அறிவையும் தகுதியையும் வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. இந்தி என்று மட்டுமல்ல, எந்த மொழியையும் கற்பதால் நமது அறிவு மங்கிவிடப்போவதில்லை. எனவே, இந்தி கற்பதை அரசியலுக்காக எதிர்ப்பது என்பது, அந்த மொழி கற்க விரும்புவோரின் உரிமைகளை பறிப்பதாகும்.
நமது தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க முடியும் என்று கூறுவதுண்டு. அதேபோல் நமக்கு விருப்பமான மொழியை கற்பதும், கற்காததும் நமக்கான உரிமை. அதில் திணிப்பு அல்லது தடுப்பு என்ற பெயரில் அரசியல் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்து அல்லது புறக்கணித்துவிட்டு, இந்தியைத் திணித்தாக வேண்டும் என்று இந்தி மொழி ஆதரவாளர்கள் கருதினால், தமிழகத்தில் அது ஒருபோதும் நடக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும்.







