தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையுமா..?
அவசர முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 4 நாட்களை கடந்தும், யார் ஆட்சி அமைப்பார் என்பதில் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம் எல் ஏக்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கடுமையாக கண்டித்த திமுக, காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றும் பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்து கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு நேரில் வந்து ஒரு நன்றி கூட தெரிவிக்காமல், முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தை அக்கட்சி செய்துள்ளதாகவும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், மாநிலத்தில் ’நிலையான ஆட்சி’ அமைவதை உறுதி செய்யவும், தேவையான அரசியல் முடிவுகளை உடனடியாக எடுக்கவும் மு.க.ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.இதனிடையே, வரும் 10ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருக்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கையெழுத்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் பெறப்பட்டதாக தெரிகிறது. அதே போல, அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் எம்.எல்.ஏக்களின் ஆதரவிற்கும் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், அடுத்த 7 நாட்களுக்கு ரிசார்ட்டில் உள்ள அறைகள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் சொகுசு விடுதியை விட்டு யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, பொறுத்திருங்கள், நல்லதே நடக்கும், அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. இந்த சொகுசு விடுதியில் 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 28 பேர் தங்கியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து, மன்னார்குடியில் வெற்றி பெற்ற அமமுக எம்.எல்.ஏ. எஸ்.காமராஜும் தங்கி இருக்கிறார்.
எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கியிருப்பது குறித்து விளக்கம் அளித்த அதிமுக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் ஆட்சி அமையும் எனக் கூறினார்.ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான ஆதாரங்களுடன் அதிமுக, திமுக வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார் என தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார். ஒரு வேளை திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





