அன்பு மகளே… இளையராஜா ட்வீட்..!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடலுக்கு திரைத்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, வியாழனன்று மாலை உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.
விமான நிலைய நடைமுறைகள் முடிந்து, பவதாரிணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, மூத்த சகோதரர் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சுப்பு பஞ்சு, வாசுகி பாஸ்கர் உள்ளிட்டோர் விமான நிலையம் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல், தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர்.





