தொடரும் ஊரடங்கு…கல்வி நிலையங்களை திறக்க தொடரும் தடை!
கொரொனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 31 வரை கல்வி நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் மத ரீதியான கூட்டங்களுக்கும் செயல்களுக்கும் ஜூலை 31 வரை தடையாகும். வெளிநாட்டு விமான சேவை ரத்து, மெட்ரோ ரயில் சேவைக்கு தடை மற்றும் திரையரங்கு, உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், கூட்டங்களை நடத்த தடை நீடிக்கிறது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும். தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்களை அனுமதிக்க வேண்டும். வீடுகள் தோறும் சோதனை நடத்தி தொற்று மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே சமயம் சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே உள்ளபடி தொடரும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்.
குறிப்பாக அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.






