--- --:--:-- --

மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு: மே 1 முதல் பழைய கார்டு செல்லாது..!

9

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டை முறையிலிருந்து முழுமையாக “சிங்கார சென்னை அட்டை” (தேசிய பொது போக்குவரத்து அட்டை – NCMC) முறைக்கு மாறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே அட்டை” திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, 2026, மே 1-ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாறத் திட்டமிட்டுள்ளது. தற்போது பழைய வகை பயண அட்டைகளை வைத்திருக்கும் பயணிகள், அதில் உள்ள மீதமுள்ள இருப்புத் தொகையை (Balance) இழக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளதாவது; பழைய அட்டையில் இருப்புத் தொகை இருக்கும் வரை அதனை வழக்கம் போலப் பயணத்திற்கு பயன்படுத்தலாம்.

 

கார்டில் உள்ள மீதமுள்ள தொகையைத் திரும்பப் பெற அல்லது மாற்றிக்கொள்ள 2 வழிகள் உள்ளன. சென்னை மெட்ரோவின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பழைய கார்டு தொகையை QR அடிப்படையிலான ‘ஸ்டோர்டு வேல்யூ பாஸ்’ (Stored Value Pass – SVP) ஆக மாற்றிக்கொள்ளலாம் அல்லது அத்தொகையை புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றிக்கொள்ளலாம்.

 

 

இந்தப் புதிய அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் பயணிகள் சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகளிலும் ஒரே அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்க முடியும். மேலும், மெட்ரோ வாகன நிறுத்தக் கட்டணங்களையும் இதன் மூலம் செலுத்தலாம்.

 

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக விளங்கும் மெட்ரோ ரயில் சேவை, தற்போது நவீன தொழில்நுட்பத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறது. இந்தத் தொழில்நுட்ப மாற்றம் தொடக்கத்தில் பயணிகளுக்குச் சற்று சிரமமாகத் தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று மெட்ரோ நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்; தடையற்ற பயண சேவையை உறுதி செய்யவே இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon