கோவை : சிறுமுகை வனச்சரகத்தில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் யானைகள் !!!
கோவை மாவட்டத்தில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோவை, மதுக்கரை உள்ளிட்ட வனச்சரகங களில் யானை,காட்டெருமை,சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் பிரிவு, தடாகம் , வீரபாண்டி, மருதமலை, சோமையம்பாளையம், நரசீபுரம் பிரிவு, தேவராயபுரம் அதேபோன்று மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லார், உதகை சாலை, கண்டியூர் போன்ற வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகள் ஊருக்குள் வருகின்றன. இதனையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனால் மனித – வன உயிரின மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக வனத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.சமீபகாலமாக கோவை அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால் அதற்கு விஷத்தை வைத்து கொல்வதாகவும், பயிர்களில் உள்ள மருந்து கலந்த உணவை உட்கொள்வதாலும், வன விலங்குகளை வேட்டையாடும் ஒரு சிலர் கும்பல் நாட்டு வெடி மற்றும் துப்பாக்கிகளால் அதனை வேட்டையாடுவது யானைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் யானைகளின் மரணத்தை கட்டுப்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.இதனடிப்படையில் கோவையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் கழுகுப் பார்வையில் யானைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை காப்புக்காட்டில் கண்காணிப்பில் உள்ள 22 யானைகளின் கழுகுப் பார்வை ட்ரோன் கேமரா வீடியோ காட்சிகளை வனத்துறை வெளியிட்டுள்ளது.இச்சம்பவம் வன ஆர்வலர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.






