--- --:--:-- --

சென்னையில் கடல் அலையில் சிக்கிய கோக்னிசன்ட் ஊழியர்கள்..!

6

சென்னையில் உள்ள கோக்னிசன்ட் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சனிக்கிழமை கடற்கரைக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர். இந்த விபத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார், 24 வயது இளைஞர் ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்றொருவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 இளைஞர்கள், சென்னை சிறுசேரியில் உள்ள கோக்னிசன்ட் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இந்த குழுவைச் சேர்ந்த 26 பேர் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பீச் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள மச்ச நாராயண கோவிலுக்கும் அவர்கள் சென்றுள்ளனர்.

 

அப்போது, கடலில் இறங்கி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எழுந்த 10 முதல் 15 அடி உயர ராட்சத அலைகள் அவர்களை உள்ளே இழுத்துச் சென்றன. இதில் பண்டாரா மாவட்டத்தைச் சேர்ந்த மயூரி ஹரிச்சந்திர சவுத்ரி (22) உயிரிழந்தார். ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய் பாட்டீல் (24) என்பவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். புனேவைச் சேர்ந்த ராஜ் கேதாரி என்பவர் கடலில் தத்தளித்தபோது மீட்கப்பட்டு, தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய ராஜ் கேதாரி கூறுகையில், “கடல் நீர் எங்களின் இடுப்பு அளவுதான் இருந்தது, ஆனால் திடீரென எழுந்த ராட்சத அலை எங்களை உள்ளே இழுத்தது. நான் கரைக்கு நீந்தி வர முயன்றபோது மயூரியை மீட்டேன், ஆனால் ஜெய்யை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கானாத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். கோவளம் மற்றும் மெரினா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், ஃபைபர் படகுகள் மற்றும் மூன்று ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் மாயமான ஜெய் பாட்டீலைத் தேடி வருகின்றனர். உள்ளூர் மீனவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

முன்னதாக, மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மயூரிக்கு மீனவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும், அவர் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இந்த துயரச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், மாயமான இளைஞரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய பண்டாரா மற்றும் ஜல்கான் மாவட்ட நிர்வாகங்கள் தமிழக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது உயிரிழந்த மற்றும் மாயமானவர்களின் உறவினர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். உயிரிழந்த மயூரியின் தந்தை ஹரிச்சந்திர சவுத்ரி மற்றும் சகோதரர் அனிகேத் ஆகியோர், அரசு மற்றும் காவல்துறையினர் தங்களுக்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். மாயமான இளைஞரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Right Menu Icon