சிஏஏ-க்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்யுங்கள்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
திருப்பூரில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உடனே அப்புறப்படுத்தவும் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம், பேரணி, காலவரையற்ற தர்ணா போராட்டம் என இந்த போராட்டங்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும் கடந்த பல நாட்களாக நடைபெற்று வருகின்றன.
திருப்பூரிலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டங்கள் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உரிய அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்கவும், மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவிடக் கோரிய இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேசன், ராமசாமி ஆகியோர் தலைமை தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், திருப்பூரில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.வழக்கு பதிவு செய்தவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதியின்றி சட்டவிரோதமாக போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருபவர்களையும் உடனே அப்புறப்படுத்த காவல்துறை டிஜிபிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





