தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்!
தமிழ்நாடு முழுவதும் கோடைக் காலம் தற்போதே ஆரம்பித்துவிட்டது. கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் மழையின் அளவு பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை முன்னெச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1மற்றும் நாளை மறுநாள் ஏப்ரல் 2 தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





