ஊரடங்கிற்கு பின் கார் வைத்திருப்போர் செய்ய வேண்டியவை!
ஊரடங்கு தளர்த்தப் பட்ட நிலையில் அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு செல்லக்கூடியவர்கள் தங்களது வீடுகளில் 45 நாட்களுக்கு மேலாக கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்த நிலையில் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
கொரொனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அவரவர் தங்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில் அன்றாடம் இயக்கப்பட்டு வந்த வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே வரும் 17ம் தேதி ஊரடங்கு தளர்த்தப் பட உள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை மீண்டும் எடுக்கும் போது நன்கு கவனித்து எடுக்க வேண்டும் என்று கார் பழுது நீக்கும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
காரின் அடிப்பகுதியிலோ, என்ஜின் உள்ள பகுதியிலோ பாம்பு, எலி, குருவி போன்றவை தங்கி உள்ளனவா என பார்த்த பின்பு பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர். காரின் ஜன்னல்களை திறந்து விட்டு உடனடியாக எஞ்சினை ஸ்டார்ட் செய்யக்கூடாது என்றும் அப்படி செய்தால் எஞ்சின் சீஸ் ஆகும் எனவும் கூறுகின்றனர்.
பல நாட்களாக இயக்கப்படாத கார்களை அதன் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கார் பழுது நீக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.







