மீன் கடையை இடமாற்றம் செய்த சுகாதார ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளராக இருப்பவர் நா.வெங்கடாசலம் ஆவார். இவர் 10.5.2020 மதிய உணவிற்காக செல்லும்போது மீன் கடைகாரர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் (பொ) நேற்று காலை 8 மணியளவில் நகராட்சிக்கு உட்பட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளார். நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் கல்விப்பிரியன் என்பவர் அத்துமீறி ஒரு வார காலமாக மீன் கடை நடத்தி வந்துள்ளார்.
இதனை கவனித்த அதிகாரி கடையை வேறு இடத்திற்கு மாற்றி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன் இந்நகராட்சி சுகாதார மேற்பார்வையாளரை அழைத்து மேற்கண்ட வியாபாரிக்கு ரூ.500 அபராதம் விதித்து சென்றுள்ளார்.இதனை சுகாதார ஆய்வாளரின் தூண்டுதலின்பேரில் மாற்ற கோறுகிறார் என்று தவறாக எண்ணியுள்ளார் வியாபாரி. இதன் பின்னர் மதுரம் மருத்துவமனை எதிரே 2.30 மணி அளவில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் மதிய உணவிற்கா சென்றுள்ளார்.

அப்போது வியாபாரி நீண்ட அரிவாளால் அதிகாரியை வெட்ட முற்பட்டுள்ளார். இதனை பார்த்த அதிகாரி உடனடியாக கீழே குணிந்துள்ளார். இதனால் தலையில் விழவேண்டிய அரிவாள் கையில் பட்டுள்ளது.இதில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் மூலமாக காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அலுவலர் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், துணை செயலர் ஆல்பர்ட் அருள் ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இரவும் பகலும் அயராது உழைத்து வரும் சுகாதார ஆய்வாளரின் தாக்குதலை கண்டிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.







