கருமத்தம்பட்டி பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் !!!
கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்துள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டனர். கணக்கில் வராத பணம் ரூபாய் 2 லட்சத்தி இரண்டாயிரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். கருமத்தம்பட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் அரசாங்க சேவைகளுக்கு லஞ்சமாக பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது,உள்ளே இருந்த அலுவலர்களை வெளியில் செல்லக் கூடாது எனவும், வெளியிலிருந்து யாரையும் உள்ளே விடவண்ணம் கதவை அடைத்து வைத்திருந்தனர்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முழுவதுமாக சோதனையிட்டனர்.
அப்போது,அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் அரசாங்கத்துக்கு சேரவேண்டிய பணமாக ரூபாய் 3.5 லட்சம் மட்டும் ஊழியர்களால் கணக்கில் காட்டப்பட்டது. கணக்கில் வராத பணமாக ரூபாய் 2,02,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கருமத்தம்பட்டி பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.






