ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு வெளியான அறிவிப்பு..!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடியே 25 லட்ச அட்டை தாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.
அட்டையில் உள்ள உறுப்பினர்கள், கடைக்கு சென்று விற்பனை முனைய கருவியில் கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.மூத்த குடிமக்கள், நடக்க முடியாத அளவு உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். இதற்காக அவர்கள், மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது.
இத்திட்டம் சோதனை ரீதியாக, இன்று முதல் 5ஆம் தேதி வரை சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய பத்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.





