--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் மின் கட்டண உயர்வு அமல்..!

2

மிழ்நாட்டில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

 

அப்போது வெளியிட்ட ஆணையின் படி ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி 2025- 2026 நிதி ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது. பெரிய தொழில் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு 3 புள்ளி 16 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

அதேநேரம் வீட்டு மின் இணைப்புகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.இது குறித்து மின்சாரத் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3 புள்ளி 16 சதவீதத்திற்கு மிகாமல் மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம், 50 கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் கட்டண உயர்வு கிடையாது என்றும் தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2 கோடியே 83 லட்ச வீட்டு மின் நுகர்வோர்கள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட மின்கட்டணத்தை அரசே ஏற்று அதற்கான மானியத் தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

முதல் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக்கட்டணம் 2 மாதங்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு உள்ளிட்ட மானியங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon