--- --:--:-- --

பா.ம.க சித்திரை முழுநிலவு மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணி நியமனம்..!

4

சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன். மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு நாள் மாநாடு இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். “சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன்.

 

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு நாள் மாநாடு இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “சித்திரை முழுநிலவு நாள் என்றாலே மாமல்லபுரத்து கடற்கரையும், அங்குள்ள மணல்களின் எண்ணிக்கையை விஞ்சும் அளவுக்கு கூடியிருக்கும் பாட்டாளி சொந்தங்களின் எண்ணிக்கையும் தான் எனக்கு நினைவுக்கு வரும்.

 

1988-ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் பு.தா. இளங்கோவன். அவருக்குப் பிறகு குருபரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் சித்திரை முழுநிலவு மாநாடுகளை சிறப்பாக நடத்தினார்கள். 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டை மாவீரன் குரு தலைமையேற்று நடத்தினார்.

 

அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார். 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு.அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருக்கிறேன்.

 

சித்திரை முழுநிலவு மாநாட்டின் நோக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இந்த மாநாட்டை வன்னியர் சங்கம் நடத்தினாலும் இது அனைத்து சமூகங்களுக்குமான மாநாடு; சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். அனைத்து சமூகங்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.

 

இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியம்…. மாநாட்டுக்காக நாம் மேற்கொள்ளும் பயணம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இன்றியும் அமைய வேண்டும். பயணப் பாதையில் எந்த ஒரு சலசலப்புக்கும் இடம் கொடுத்து விடாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மாமல்லபுரம் மாநாட்டுத் திடலில் பாட்டாளிகளின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Right Menu Icon