கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் மீது கல்வீசி தாக்குதல்..!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்.
அதுபோல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இது ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்த பொழுது பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்தனர்.
இதனால் பொறுமை இழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. அனைத்து கல்லூரி மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் பார்த்து சண்டையை நிறுத்தி இரு தரப்பையும் சேர்ந்த 15 பேரையும் பிடித்து தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





