தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா ..! நாளை அறிவிப்பு ..!
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைந்திருக்கும் நிலையில் முழு முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அரசு நாளை அறிவிக்க உள்ளது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கொரொனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊரடங்கு முடிவடையும் நிலையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கண்டறியப்பட்ட நிலையில் கொரொனா 19 சதவீதமாக உள்ளது. டெல்லியில் இந்த விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் வந்த பின்னரே தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனால் தமிழகத்தில் பெரிய அளவில் தளர்வுகளை எதிர்பார்க்க முடியாது.
அதே நேரத்தில் இந்த வார இறுதியில் தொற்று கண்டறியும் சதவீதம் 15.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுவே சென்னையில் 8 சதவீதமாக இருக்கும். மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தனர்.
தொற்று குறைவாக பதிவாகியுள்ள மாவட்டங்களுக்கு சற்று தளர்வு அளிக்கலாம் என தெரிவித்தனர். எனவே முதற்கட்டமாக குறிப்பிட்ட நேரத்திற்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட இருப்பதாக தலைமை செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூரில் நோய் கண்டறியும் விகிதம் 38 சதவீதமாகவும் கோவை மாவட்டத்தில் 36.6 சதவீதமாகவும் உள்ளது. தற்போதைக்கு பாதிப்பு அதிகரித்து காணப்படும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






