--- --:--:-- --

அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கும் தோப்பு வெங்கடாச்சலம்!

Thoppu venkatachalam 01

அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு தரப்படாத நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பெருந்துறையில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருபவர் தோப்பு வெங்கடாச்சலம். முன்னாள் அமைச்சரான இவர், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்.

 

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், பெருந்துறை வேட்பாளராக 3வது முறையாக களமிறங்க தோப்பு வெங்கடாச்சலம் விருப்ப மனு அளித்திருந்தார். அவருக்கு வாய்ப்பு தரப்படும் என்று, அவரது ஆதரவாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால், அவருக்கு பதிலாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமாரை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது.

 

இதனால் அதிருப்தியடைந்த தோப்பு வெங்கடாசலம், தனது ஏமாற்றத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து ஆதங்கப்பட்டார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த 2 நாட்களாக ஆதரவாளர்களிடம் தோப்பு வெங்கடாச்சலம் ஆலோசனை நடத்தி வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பெருந்துறை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால், பொதுமக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், சுயேச்சையாக போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக தோப்பு வெங்கடாசலம் களமிறங்குகிறார்.

 

பெருந்துறை தொகுதியில் தோப்பு வெங்கடாசலம் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக முன்னாள் அமைச்சர் ஒருவரே களமிறங்குவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon