தஞ்சாவூருக்கு சென்ற சசிகலா.. குலதெய்வக் கோவிலில் வழிபாடு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, நேற்றிரவு தஞ்சாவுக்கு வந்தார்; இன்று குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலை ஆனார். அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி இருந்த நிலையில், திடீர் திருப்பமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதன்பின்னர் எந்த சலனமுமின்றி அமைதி காத்து வந்த சசிகலா, தஞ்சாவூருக்கு கார் மூலம் நேற்றிரவு சென்றார். தஞ்சை அருளானந்த நகரிலுள்ள கணவர் நடராஜன் இல்லத்தில் தங்கிய சசிகலா, இன்று காலை விளார் கிராமத்தில் உள்ள குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நடராஜன் சகோதரர் பழனிவேலின் பேரக்குழந்தைகளது காதணி விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
வரும் 20ஆம் தேதி நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம். அன்றைய தினம், தஞ்சை விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள நடராசனின் சமாதிக்கு சென்று, சசிகலா மலரஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.
இதனிடையே 3 நாள் தஞ்சை பயணத்தின் போது, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிலரை சசிகலா சந்தித்து பேசவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் சசிகலா சொந்த மாவட்டத்திற்கு சென்றிருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




