அதிமுவில் கலகம்…! தொண்டர்கள் கலக்கம்!! பன்னீர்செல்வம் – பழனிச்சாமி இடையே பனிப்போர்!?
நீரு பூத்த நெருப்பாக, அதிமுகவில் முதல்வர் பழனிச்சாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாகவும், எனவே பொதுக்குழுவிலோ, அதற்கு முன்பாகவோ, அதிமுகவில் கலகம் வெடிக்கலாம் என்றும், அக்கட்சி தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக அரசு கவிழ்ந்துவிடும்; அந்த கட்சி சின்னாபின்னமாகிவிடும் என்று திமுகவினர் உள்ளிட்ட பலரும் மனப்பால் குடித்தனர். ஆனால், முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமியோ, தனது அபார உத்திகள் மூலம் கட்சியை ஒருங்கிணைத்ததோடு, கட்சியிக்குள் தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டார். இதன் மூலம் தனது ஆட்சி காலத்தை முழுமையாக அவர் நிறைவு செய்யப்போகிறார்.
அதிகாரப் போட்டி!
அதேநேரம், அதிகாரம் என்ற பசைதான், அதிமுகவை பிளவுபடாமல் ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறது; அதிகாரம் இழக்கும் போது அதிமுக சிதறுண்டு போகும் என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கூறி வந்திருக்கின்றனர். இதை உறுதி செய்வது போல், ஆட்சியை நிறைவு செய்யும் தருணத்தில் அதிமுகவில் அதிகாரப்போட்டி தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது.
ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே பகீரங்க மோதல்
சில மாதங்களுக்கு முன்பு, தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இடையே பகீரங்க மோதல் வெடித்தது. அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ். வீட்டிற்கும் ஈ.பி.எஸ். வீட்டிற்கும் மாறிமாறிச் சென்று இருவரையும் சமாதானப்படுத்தினர். ஒருவழியாக, அக்டோபர் 7ம் தேதி, எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன், பிரச்சனை முடிந்ததாக தொண்டர்கள் நினைத்தனர். ஆனால், முதல் ரவுண்டில் தோல்வியுற்ற ஓ.பி.எஸ்., அடுத்த சுற்றில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், அவ்வப்போது எடப்பாடிக்கு மறைமுகமாக எச்சரிக்கை ‘சிக்னல்’கொடுத்து வருகிறார். இதற்கு சில உதாராணங்களை சொல்லலாம்.
அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை, நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிட்டார். இதுபற்றி யாருமே அவசரப்பட்டு கருத்து தெரிவிக்காத நிலையில், அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தேனியில் ஓ.பி.எஸ். அளித்த பேட்டியில் ரஜினிக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, அவருடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக ஒரு போடு போட்டார். இதை சொன்னது, சாதாரண நிர்வாகியல்ல, கட்சியில் அதிகாரம் கொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ள பன்னீர்செல்வம்தான்.
இதை சற்றும் எதிர்பாராத எடப்பாடியோ, ஓ.பி.எஸ். சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்று ஜெயக்குமாரை விட்டு மறுப்பு தெரிவிக்க செய்தார். ஆனால், ஓ.பி.எஸ். விடுவதாக இல்லை; அடுத்த சில தினங்களில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஆட்சியில் இரண்டரை வருடம் ஆணுக்கும், அடுத்த இரண்டரை வருடம் பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்” என்று பேசினார். சசிகலாவை மறைமுகமாக குறிப்பிட்டு ஓ.பி.எஸ். இப்படி சொன்னாரா தெரியவில்லை; ஆனால், எடப்பாடி முழு பதவி காலத்திற்கும் முதல்வராக தொடரக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை என்று அதிமுகவினரை கருதத் தொடங்கினர்.
மூத்த அமைச்சர்கள் “ஷாக்”
நிலைமை இப்படி இருக்க, முதல்வர் பழனிச்சாமி, டிசம்பர் 19ஆம் தேதி திடீரென தனது தேர்தல் பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கினார். தேர்தல் பிரச்சார திட்டத்தை கட்சித் தலைமை அறிவிக்கும் முன்பாக, தன்னிச்சையாக அவர் பிரசாரத்தை திடுதிடுப்பென தொடங்கியது, ஓ.பி.எஸ்.சுக்கு மட்டுமின்றி, மூத்த அமைச்சர்கள் பலருக்கே “ஷாக்” ஆக இருந்தது.
அடுத்த மோதல், டிசம்பர் 20-ஆம் தேதி வெடித்தது. அன்றிரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். கேபி முனுசாமி உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. பொதுக்குழுவை கூட்டும் நாள் குறித்து இறுதி செய்ய நடந்த இக்கூட்டத்தில், எடப்பாடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது பற்றி, ஓ.பி.எஸ். பிரச்சனையை கிளப்பினாராம்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் தெரிவித்திருக்க வேண்டாமா? கட்சி சார்பில் முறைப்படி பிரசார தேதி அறிவிக்கும் முன்பு எப்படி, வாக்கு சேகரிக்கலாம் என்று ஓ.பி.எஸ். பொரிந்து தள்ளினாராம். அத்துடன், கட்சியின் முக்கிய முடிவுகள் தொடர்பாக தன்னிடம் ஆலோசனை நடத்தப்படுவதில்லை என்றும் ஆவேசப்பட்டாராம்.
ஆனால், முனுசாமி உள்ளிட்ட சிலர், அண்ணனின் நட்சத்திர ராசிப்படிதான் அந்த கோவிலில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார் என்று சமாதானப்படுத்த முற்பட்டனராம். ஆனால், அதற்கு ஓ.பி.எஸ் உடன்படாத நிலையில், நீங்கள் மட்டும் ரஜினி பற்றியும், பெண்களுக்கு ஆட்சியில் பங்கு பற்றியும் கட்சியில் ஆலோசித்துவிட்டா பேசினீர்களே என்று மடக்க, ஓ.பி.எஸ். சைலண்ட் ஆனாதாக சொல்கிறார்கள்.
அதன்பிறகும் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் ‘லடாய்’ தொடர்கிறது. குமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்தார். அங்கு டிசம்பர் 22ம் தேதி அருமனை கிறிஸ்துமஸ் விழா பேனரில் ஓ.பி.எஸ். படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்தநாள் அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் எடப்பாடி பங்கேற்றார். அவர் வந்து செல்லும் வரை, ஓ.பி.எஸ். அங்கு எட்டிப்பார்க்கவில்லையாம்; எடப்பாடி சென்ற பிறகே வந்துள்ளார். இது, முதல்வரை டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம்.
அதிமுகவில் தன்னை ஓரங்கட்டுகிறார்கள். எனவே, பொறுத்தது போதும் பொங்கி எழவேண்டிய நேரமிது என்று ஓ.பி.எஸ். அடுத்த “தர்ம யுத்தத்திற்கு”தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள். அவரை எதிர்கொள்ள முழு பலத்துடன் எடப்பாடியும் ஆயத்தமாகிவிட்டதாக கட்சி நிர்வாகிகளே பேசிக் கொள்கிறார்கள்.
வரும் 27ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக்கூட்டம், சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, ஜனவரி 9ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். – இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இடையிலான மோதல் பூதாகரமாக வெடிக்கும் என்றே தெரிகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த கலகம், உண்மையான விஸ்வாசிகளுக்கு கலக்கத்தை தந்துள்ளது.








