5 வயது சிறுவன் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழப்பு..!
திருச்சியில் 5 வயது சிறுவன் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நகரில் உள்ள அனைத்து சாக்கடைகள் மற்றும் வடிகால் பாதைகளில் சிமெண்ட் கான்கிரீட் மூடிகள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தொலைபேசி வாயிலாக உறுதியளித்துள்ளார்.
திருச்சியில் உள்ள சாக்கடை, மழை மற்றும் வெள்ள நீர் வடிய அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் மொத்த தொலைவு 750 கிலோ மீட்டர் எனவும், ஆழம் ஒரு அடி முதல் 10 அடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலான வடிகால் பாதைகள் திறந்த வெளியில் இருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே கான்கிரீட் மூடிகள் போடப்பட்டுள்ளன. இதனால் விலங்குகள், பாதசாரிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் அடிக்கடி தவறி விழுந்து உயிரிழப்பதாக கூறப்படுகிறது.
வாகனங்களும் அடிக்கடி திறந்தவெளி சாக்கடையில் சிக்கி கொள்வதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி விபத்துகளை தவிர்க்க தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருச்சி மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியன் வடிகால்களை உடனடியாக மூட காங்கிரீட் மூடிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.






