2021 தேர்தல்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு கொளுத்திப் போட்ட சர்ச்சையால் பரபரப்பு!!
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என அமைச்சர் செல்லூர் ராஜு தனது பாணியில் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டின் தேர்தல் ஜனநாயக சட்டத்தின்படி, பிரதமரையோ, ஒரு மாநில முதல்வரையோ தேர்வு செய்வது என்பது தேர்தல் முடிவு வெளியான பின்புதான் முடிவு செய்யப்படும். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற தனி ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ, தேர்தலுக்குப் பின் எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தான் பிரதமர் அல்லது முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நடைமுறை. அப்படித்தான் சுதந்திரம் பெற்றது முதல் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 1967 வரை நடைமுறையாக இருந்தது.

தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளர்
ஆனால் 1967-க்குப் பின் தமிழகத்தில் அண்ணா ஆட்சிக் காலம் தொடங்கியது முதல் தேர்தலுக்கு முன்னரே முதல்வர் வேட்பாளர் இன்னார் தான் என முன்னிறுத்துவது வழக்கமாகி விட்டது. அண்ணாவுக்குப் பின் கருணாநிதி, அதன் பின் திமுக பிளவுபட்டு அண்ணா திமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கியது முதல் ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவில் கருணாநிதி, அதிமுகவில் எம்.ஜி.ஆர். என முதல்வராக முன்னிறுத்தப்பட்டனர். 1977 முதல் 84 வரை இது தொடர்ந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 முதல் 2016 வரை கருணாநிதி Vs ஜெயலலிதா என கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தப் போட்டி நீடித்தது.
முதல்வர் வேட்பாளர் யார்?
தற்போது கருணாநிதியும் இல்லை.. ஜெயலலிதாவும் இல்லை… இதனால் அரை நூற்றாண்டு அரசியலில் முதன் முறையாக வரும் 2021 பொதுத் தேர்தல் ஆளுமை மிக்க மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடைபெறும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் ஆயத்தப் பணிகளில் மும்முரமாகிவிட்டன. திமுக தரப்புக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராகவும், அதிமுகவுக்கு பிரபல பத்திரிகையாளர் சுனில் ஆலோசகராகவும் செயல்பட்டு பணிகளை முடுக்கி விடுவதாக தகவல் . இதனால் யார்? யார்? முதல்வர் வேட்பாளராக இரு கட்சிகளிலும் முன்னிறுத்தப்பட உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதில் இப்போது எதிர்க் கட்சியாக உள்ள திமுக தரப்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. கட்சியில் அவருக்கு யாரும் போட்டியாகவும் இல்லை என்பது கண்கூடான உண்மை. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவில் தான் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் குழப்பமோ குழப்பம் தொடர்கிறது .
https://www.kuttramkuttrame.com/2020/08/08/sudden-visit-action-plans-eps-action-strategy-to-capture-the-southern-hemisphere-opscm-admk-dmk/

“இரட்டை தலைமையில் அதிமுக”
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிர்ஷ்டவசமாக திடீர் முதல்வரானவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதுவும் சசிகலா பின்னால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் அணிவகுத்து அவரை முதல்வராகவும் தேர்வு செய்திருந்த காலக்கட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பால் சிறை செல்ல நேரிட்டது. இதனால் சசிகலாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடியார்.
எப்படியோ பல பிரச்னைகளை எளிதில் கடந்து முதல்வர் பதவியை கெட்டியாக தக்கவைத்து வருகிறார் எடப்பாடி .ஆனால் வரும் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது வேறு ஒருவர் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்வி இப்பொழுதே எழத் தொடங்கி இருக்கிறது.ஏனெனில் அதிமுகவில் இப்போது ஒற்றைத் தலைமை கிடையாது. கட்சிக்கு ஓபிஎஸ்சும், ஆட்சிக்கு இபிஎஸ்சும் தலைமை வகிக்கின்றனர். இதனால் முதல்வர் வேட்பாளர் என்று வரும் போது சலசலப்புகள் எழும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டே கேள்வி எழுந்த போது கட்சியே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதனால் முதல்வர் பதவியை ஓபிஎஸ்சும் குறி வைப்பதாக கூறப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பும் ஒன்றாக செயல்படுவது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும், தமிழகம் முழுவதும் இன்னும் இரு அணிகளாகவே பிரிந்து கிடக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும் தேர்தலுக்கு முன்னதாகவே சசிகலா விடுதலையாகி விடுவார் என்பதும் உறுதியாகியுள்ளது. அப்போது அதிமுக கட்சிக்குள் ஒரு பெரும் பிரளயம் உருவாகி, கட்சியை சசிகலாவிடம் ஒப்படைத்து விடும் வாய்ப்பு உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.
“அமைச்சர் செல்லூர் ராஜு
கொளுத்திப் போட்ட சர்ச்சை!”இந்த நிலையில் தான் மதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அமைச்சர் ராஜு சில நேரங்களில் அதிமேதாவித்தனமாக (வைகை அணையில் தெர்மா கோல் விட்டது) ஏடாகூடாமாக செய்தாலும் , சில சமயங்களில் யதார்த்தமான உண்மைகளையும் உளறிக் கொட்டி விடுவதும் வழக்கம்.
அது போல், அடுத்த தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள். எனவே தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் தேர்தலுக்கு முன் அதிமுக சார்பில் யாரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பில்லை என்பது போன்ற கருத்தை செல்லூர் ராஜு கூறியுள்ளதாகவே தெரிகிறது. அப்படி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் அதிமுக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், வேட்பாளர் தேர்விலேயே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளிடையே கோஷ்டி மோதல் உச்சகட்டமாக இருக்கும் என்பது நிச்சயம்.
அதற்கு செல்லூர் ராஜு இப்போது கூறியுள்ள கருத்து அச்சாரம் போட்டது போல் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கருதப்படுகிறது.








