முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி…! தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தம்மை சந்தித்தவர்களுக்கு “டிவீட்”!!
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலத்தில் தம்மை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், பரிசோதனை செய்து கொள்வதும் நலம் என டிவிட்டரில் சுவரே பதிவிட்டுள்ளார்.
கடந்த 6 மாதத்திற்கு மேலாக உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா தொற்று, எவ்வளவு பாதுகாப்பாக இருப்பவர்களையும் எப்படியோ தொற்றி விடுகிறது. இதனால் ஆகப் பெரும் விஐபிக்கள் பலரும் கொரோனா அச்சத்தில் உறைந்துள்ளனர் என்றே கூறலாம். கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கும் பணியில் முன்களத்தில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மக்கள் பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் இந்தத் தொற்று பரவி பீதியை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோணா தொற்றுக்கு ஆளாகும் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எண்ணிக்கை 30 ஐ கடந்து தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் அரசியல்வாதிகள் பெரும் கலக்கத்திலும், வெளியே நடமாடுவதற்கும் அஞ்சியுள்ளனர்.
இந்நிலையில் மிகப் பெரும் பாதுகாப்பு வளையத்தில் உள்ள விவிஐபிக்கள் பலருக்கும் இந்தத் தொற்று பாதிப்பு ஏதோ ஒரு வகையில் பரவுவது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அப்படித்தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடந்த வாரம் தொற்று உறுதியானது. இந்நிலையில் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இத்தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளதுடன், தம் முடன் கடந்த ஒரு வார காலத்தில் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்து கொள்வதும் அவசியம் என பிரணாப் முகர்ஜி பதிவிட்டுள்ளார்.






