--- --:--:-- --

“வெளுத்து வாங்கும் தென்மேற்கு பருவமழை” தமிழக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..! பெரியாறு நீர் மட்டம் “கிடு கிடு” உயர்வு!!

352

தென் மேற்கு பருவமழை அதிதீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால் தமிழக அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. பெரியாறு அணை நீர்மட்டம் 3 நாளில் கிடு கிடுவென 15 அடி உயர்ந்து 130 அடியை தாண்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்ததால் இந்தாண்டு வழக்கமான ஜூன்12-ந் தேதி பாசனத்திற்கு திறக்கப்பட்டது. ஆனால் ஜுன் முதல் வாரமே தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை தீவிரமடையவில்லை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து மிக குறைந்த நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 64 அடியானது.

 

அணை  நிரம்பியது

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கியது. கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. இதில் கேரளாவின் வயநாடு, இடுக்கி மாவட்டங்களிலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் வரலாறு காணாத மழை கொட்டுகிறது. இதனால் கர்நாடகத்தின் கபினி அணை வேகமாக நிரம்பியது. கேஆர்எஸ், ஹாரங்கி அணைகளும் நிரம்பும் நிலையில், காவிரியில் உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டு வெள்ளம் போல் பாய்ந்தோடி வருகிறது.

 

28.99 டிஎம்சி

இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் வரும் நாட்களில் கிடு கிடுவென உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 65.55 அடியாகவும், நீர் இருப்பு 28.99 டிஎம்சியாகவும் இருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.

 

நீர் இருப்பு 4,697 மில்லியன்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மழை கொட்டுவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்வரத்து 17,746 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்து அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்துள்ளது .கடந்த 3 நாட்களில் மட்டும் 15 அடி உயர்ந்து நீர் இருப்பு 4,697 மில்லியன் கன அடியாகவும், நீர் திறப்பு வினாடிக்கு 1,650 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்த நிலையில் இன்னமும் பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கிடுகிடுவென நீர்மட்டம் உயர்வதால் விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை வெளுத்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 39,617 கன அடியாக உள்ளது. இதனால் நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. பாசனத்திற்காக நீர் திறப்பு 900 கன அடியாகவும் உள்ளது.

 

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக் கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகும் நிலை உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon