--- --:--:-- --

கொரோனாவால் களையிழந்த “ஆடி 18-ம் பெருக்கு” விழா..! வெறிச்சோடிய காவிரி கரை..! வீடுகளில் எளிமையாக கொண்டாட்டம்!!

17

மங்களகரமான ஆடிப்பெருக்கு விழாவன்று காவிரிக்கரையோரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். கொரோனா காரணமாக மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால், கரை புரண்டோடும் காவிரி நதிக்கரை, இந்தாண்டு வெறிச்சோடி களையிழந்து காணப்படுகிறது. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.

 

மங்களகரமான இந்த புனித நாளில் ஆற்றங்கரை, நதிக்கரை, அருவிக்கரைகளில் சிறப்பு பூஜைகள், படையல் வைத்து புனித நீராட லட்சக்கணக்கானோர் திரள்வர். புதிதாக மணமுடித்த புதுமணத் தம்பதியர் தங்கள் திருமண மாலையை ஆற்றில் விடுவது, மங்கல நாணை மாற்றிக் கொள்வது, பெண்கள் தாலிப் பெருக்கி போடுவது என இந்த நாளில் பக்தியுடன் கொண்டாடுவதும் வழக்கம்.

 

விவசாயிகளும் இந்நாளில் விதைப்பு செய்வது மேலும் விசேஷமாகும். ஆடிப்பெருக்கன்று ஆண்டுதோறும் காவிரி நதிக்கரை முழுவதும் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடி உற்சாகம் கரை புரளும். கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ஆங்காங்கே போர்வெல் அமைத்து அந்த தண்ணீரில் நீராடி ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

இந்தாண்டோ ஜுன் 12-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் விழாக்கள் பலவுக்கும் கட்டுப்பாடுகள், தடை போடப்பட்டது போல, ஆடிப் பெருக்கை கொண்டாட காவிரி கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றங்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

 

சில இடங்களில் தடையை மீறி கூடிய மக்கள் துரத்தப்படுவதும் நடக்கிறது. இருந்தாலும் இந்த நாளை மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையாக கொண்டாடினாலும், வழக்கமான உற்சாகம் மிஸ்ஸிங் ஆகியுள்ளது என்றே கூறலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon