கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் ..!
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிர்வாகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வீடியோ வெளியிட்டதால் அதை தடை செய்ய கோரி பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். கந்த ஷஷ்டி வீடியோவை பேசி வெளியிட்ட நபரான சுரேந்தரனை தேடி வந்த நிலையில் புதுச்சேரியில் சரண் அடைந்த அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
பின்னர் டி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ யூடியூபில் இருந்து முடக்கப்பட்டது.
இந்த நிலையில் கருப்பர் கூட்டம் அலுவலகத்தில் கைபற்றிய ஆவணங்களை யூட்யூப் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை மூடக்கோரி பரிந்துரை கடிதம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.






