ஒரே நாளில் 12 பேர் பலி? ஆனால் பட்டியலில் 2 மட்டுமே பதிவு … மதுரையில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா? டீன் சொல்லும் விளக்கம் இதுதான்!!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததாக பகீர் தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் உயிரிழப்பு 2 தான் என வெளியாகியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனால் மதுரையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து மறைக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்த நிலையில், வெவ்வேறு நோய் பாதிப்புகளால் இறந்தவர்களை கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறுவது தவறு என்றும் கொரோனா உயிரிழப்பை மறைக்கவில்லை என்றும் டீன் சங்குமணி மழுப்பலாக விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. இதில் சென்னையில் மட்டும் பாதிப்பு அரை லட்சத்தை நெருங்கி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரமான மதுரையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து ஹாட் ஸ்பாட் டாக மாறி வருகிறது.
இன்று மட்டும் 203 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, இதுவரை மதுரையில் மட்டும் மொத்த எண்ணிக்கை 1259 ஆக அதிகரித்துள்ளது. மதுரை நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தினசரி உயிரிழப்புகள் கணிசமாக உள்ள நிலையில், எண்ணிக்கை மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.தமிழகத்திலேயே கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவான மதுரையில் இன்று லரை மொத்த உயிரிழப்பு 11 என சொல்கிறது தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை.
ஆனால் இன்று மட்டுமே அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோணா வார்டில் 12 பேர் உயிரிழந்ததாக காலை முதல் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக செய்திகள் வெளியாகி பகீர் கிளம்பியது. ஆனால் இன்று மாலை சுகாதாரத் துறை வெளியிட்ட கொரோனா அப்டேட்டில் மதுரையில் 2 பேர் மட்டுமே உயிரிழப்பு என பட்டியலில் கூறப்பட்டிருந்தது. இதனால் கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படுவது உண்மைதானா? என்ற சந்தேகம் மேலும் வலுக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்கு மணி மழுப்பலாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், மதுரையில், நேற்று முன்தினம் 2 பேரும், நேற்று 2 பேரும் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. வந்தபிறகு சொல்வோம்.
மதுரை போன்ற பெரிய அரசு மருத்துவமனையில் தினமும் வெவ்வெறு நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சைக்கு கடைசி நேரத்தில் வருவோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பது வழக்கமானது. அவர்களையும் கொரோனாவால் இறந்ததாக கூறுவது தவறு. கொரோனா பாதிப்பும், அதன் உயிரிழப்பும் மறைக்காமல் வெளிப்படையாக சொல்லப்படுகிறது என்று டீன் சங்கு மணி மழுப்பலாக தெரிவித்துள்ளார்.






