விபரீதம்..! வில்லங்கம்…!!அவசியம் தானா ஆன்லைன் வகுப்பு? பிஞ்சு மனதில் நஞ்சு கலப்பதால் வெறுப்பு
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதனால் பார்வை கோளாறு, உளவியல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது. மொபைல்போன் பயன்பாட்டால், மாணவர்கள் திசைமாறிச் செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளதால், உடனடியாக அதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கடந்தாண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை முற்றிலும் முடக்கிவிட்டது. நமது வாழ்நாளில் இதுவரை சந்திக்காத காட்சிகளை கண்டு வருகிறோம். கோவில்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 24ம் தேதிக்கு பிறகு இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தொழில்கள் முற்றிலும் முடங்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
கொரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயல்படவில்லை. 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், 10-ம் வகுப்பு தேர்வும் இழுபறிக்கு பிறகு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது; 12-ம் வகுப்புத் தேர்வுகள் மட்டும் ஒன்றிரண்டு நிலுவையில் இருக்கின்றன. அடுத்த கல்வியாண்டும் தொடங்கிவிட்ட நிலையில், பள்ளிகள் உடனடியாக திறப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
இதனால், பல்வேறு தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது, ஒரு தரப்பினர் வரவேற்றாலும், அதில் பல சிக்கல்கள் இருப்பதாகக்கூறி, பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனென்றால் பள்ளியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான், குழந்தைகள் வகுப்பில் இருப்பார்கள். ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டது முதல், வீட்டில் குழந்தைகள் எந்நேரமும் மொபைல்போன் கையுமாக அமர்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்பில் ஆசிரியர் அனுப்பிய பி.டி.எப். பாட பக்கங்களை ஜூம் செய்து பார்த்து, அதில் இருந்து வீட்டுப்பாடங்களை மாணவர்கள் எழுத வேண்டியிருக்கிறது. இதனால், செல்போன் அல்லது கம்ப்யூட்டர் முன்பு கண்ணை தேய்த்தபடி குழந்தைகள் அமர்ந்திருப்பது பார்க்க மிகவும் பரிதாபமாக உள்ளது. எல்லோரது வீடுகளிலும் கம்ப்யூட்டர் வசதி, அறையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் பாடம் கவனிக்கும் வசதி இருக்காது.
சில வீடுகளில் ஒரு மொபைல் இருந்து, அங்கு 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால், எப்படி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது? பெரும்பாலான வீடுகளில் ஒரு மொபைல்போன் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. அதை ஆன்லைன் வகுப்பிற்காக குழந்தையிடம் தருவதா? அல்லது ஏதாவது அலுவலக அழைப்பு வந்தால் பேசுவதா என்ற சிரமம் பெற்றோருக்கு உள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. மொபைல்போன் இருந்தாலும் டவர் பிரச்சனை இருக்கும், அல்லது நெட்பேக் காலியாகிவிடும். இணையதள பயன்பாடு கிடுகிடுவென்று அதிகரித்து, அது பெற்றோருக்கு கூடுதல் நிதிச்சுமையை தருகிறது. இது, இருப்பவர்கள் இல்லாதவர்கள் இடையிலான பாகுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, மாணவர்களின் மனநலன், சைபர் குற்றம், பாதுகாப்பற்ற சூழலில் பயன்படுத்துதல், பார்வை குறைபாடு, கழுத்து வலி போன்றவையாகும். அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகம், ‘மொபைல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புத்தசைகளில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பத்து மடங்கு பாதிப்புகள் உருவாகும் என்று கூறுகிறது. இது நாளடைவில் புற்றுநோய், மூளைக்கட்டி ஆகியவை வரவும் வாய்ப்புள்ளதாக, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாணவர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தையும் ஆன்லைன் வகுப்புகள் உண்டாக்குகின்றன. கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியின் வீட்டில் டிவி இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், 16 வயது கனிஷ்கா என்ற மாணவியை, ஆன் லைன் பாடங்களை செய்யுமாறு பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையெல்லாம் விட உச்சபட்ச கொடுமை, ஆன்லைன் வகுப்பால் சிறுமிக்கு நேர்ந்துள்ளது. ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் வாங்கிதந்த ஸ்மார்ட்போனில் ஆபாசப்படம் பார்த்த சிறுவர்கள் இருவர், அந்த படத்தை 11 வயது சிறுமிக்கும் காண்பித்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவை சுந்தராபுரம் பகுதியில்தான் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்படும் ஆன்லைன் வகுப்புகளில் இத்தகைய பேராபத்துகள் உள்ளதை அரசு உணர வேண்டும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஒருசில மாநிலங்களில் 5 அல்லது 8ம் வகுப்பு வரை, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளனு. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பள்ளிகள் சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, அதுவரை மாணவர்கள் பாடங்களை படிக்காததாலோ எந்த பாதகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எனவே, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
கல்வி என்பது அனைவருக்கும் பொது; ஆனால், அதற்காக கையாளப்படும் தொழில் நுட்பம் அனைவரிடமும் இருக்குமா என்பது சந்தேகமே. நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு ஆன்லைன் வகுப்பு என்பது, நிச்சயம் ஒரு சுமையாகவே இருக்கும். அத்துடன், ஆன்லைன் பாடங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், உளவியல் சிக்கல்களை மனதில் கொண்டு, அதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; பாதக அம்சங்களே அதிகம் இருப்பதால், அதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே, பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெற்றோரே, இப்படி செய்யுங்க!
நமது மொபைல்போனை ஆன்லைன் பாடத்திற்கோ அல்லது கேம்ஸ் விளையாடவோ, குழந்தைகள் பயன்படுத்துவார்கள். அப்போது இணையதளத்தை திறந்ததும் பக்கவாட்டில், ஆபாச இணையதள பக்கங்களுக்கான லிங்க் தோன்றுகிறது. இவ்வாறு வராமல் இருக்க கீழ்கண்ட வழிமுறைகளை பெற்றோர் செய்யலாம்.
முன்னெச்சரிக்கையாக உங்களது ஸ்மார்ட்போனில் Play store சென்று Settingsல் ‘Parent control’ option ஐ ‘on’ செய்ய வேண்டும். அதன் கீழே உள்ள ‘Apps and Games’ ஐ கிளிக் செய்து ‘12+’ல் டிக் செய்ய வேண்டும். அடுத்ததாக Movies ஐ கிளிக் செய்து ‘U’ என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ‘YOU TUBE’ settings ல் ‘Restriction mode’ ஐ On செய்யவும். இதனால், நம் குழந்தைகளின் smartphoneல், தேவையற்ற விளம்பரம் மற்றும் Video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.






