ஆன்லைன் படிப்பில் அசத்தும் 10ஆம் வகுப்பு மாணவர்!
கொரோனா பொது முடக்க காலத்தை பயனுள்ளதாக மாற்றி முதலீட்டு வணிகம், தரவு அறிவியல் குறித்த ஆன்லைன் படிப்பினை பயின்று அமெரிக்காவின் ஹார்வர்டு மற்றும் ஏல் பல்கலைகழகங்களில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளார் சிவகாசியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியா புரத்தை சேர்ந்த வீரபத்திரன், வாணி தம்பதியின் மகன் நிகில் ஆதித்யன் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இறகுப்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவரான நிகில் ஐம்பதிற்கும் அதிகமான பரிசுகளை வென்றுள்ளார்.
பொது முடக்க நேரத்தை பயனுள்ளதாக கழிக்க நினைத்த நிகில் ஆதித்தியன் அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இன்வெஸ்ட்மென்ட் பாங்கிங் எனப்படும் முதலீட்டு வணிகம் சார்ந்த ஆன்லைன் படிப்பில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டேட்டா சயின்ஸ் எனப்படும் தரவு அறிவியல் பிரிவு படிப்பினை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து அதிலும் பட்டம் பெற்றுள்ளார். இதோடு கூகுள் அகாடமியின் டேட்டா அனலிடிக்சில் 6 நிலை சான்றிதழ்களையும் பெற்றுள்ள நிகில் மற்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் புதிதாக www.insightbig.com என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்.
பொது முடக்க காலத்தில் வீடியோ கேமும் கையுமாக இருக்கும் சிறுவர்கள் மத்தியில் நிகில் தனது பாதையை தீர்மானித்து அதில் முன்னேறி பலரை ஆச்சரியப்படுத்தினார்.






