--- --:--:-- --

கொரானா முன்னெச்சரிக்கை : அடிக்கடி கை கழுவ தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குக..! திருப்பூர் மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!!

11

கொரானா முன்னெச்சரிக்கையாக அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வலியுறுத்தும் நிலையில், திருப்பூர் நகரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு செயலாளர் முத்துக் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரானா வைரஸ் அபாயத்திலிருந்து தப்பிக்க கைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என அரசு சார்பில் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் திருப்பூரிலோ தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10, 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. அது 2 மணி நேரம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 10 முதல் 20 குடங்கள் வரை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

இந்த நிலையில் கொரானா தடுப்புக்காக அரசின் அறிவிப்பை எப்படி செயல்படுத்துவது எனத் தெரியவில்லை. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு குழந்தைகள் வீட்டில் இருக்கும் நிலையில் தண்ணீர் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே முறையான மற்றும் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

 

மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் முறையாக குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது கொரானா வைரஸ் கட்டுப்படுத்தும் பொருட்டு, போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்த பட்சம் 2 நாளைக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon