7 பேர் விடுதலை: தமிழக அரசின் கடிதம் நிராகரிப்பு, ஆதலால் பூஜ்ஜிய மதிப்புடையதாக கருதுக !
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றிய தமிழக அரசின் தீர்மானம் குறித்த கடிதத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதால் அதனை பூஜ்ஜிய மதிப்புடையதாக தான் கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் 7 பேர் விடுதலை தீர்மானம் பற்றிய தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டதாகவும், எனவே அதை பூஜ்ஜியம் மதிப்புடையதாகத் தான் கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எனவே நளினியின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு அவர் வாதிட்டார்.
நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் வலியுறுத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




