டிரம்ப் இந்தியா வருகை..! 4 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி
அமெரிக்க அதிபரின் இந்திய சுற்றுப்பயணத்தை யொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை, மத்திய ஆயுதப்படை போலீஸ், அமெரிக்க ரகசிய போலீஸ் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற 24-ஆம் தேதி இந்தியா வருகிறார்.
அவர் டெல்லி, அகமதாபாத் மற்றும் ஆக்ராவில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதுடன் சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். டிரம்புடன் அவரது மகளின் கணவர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட். பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒப்ரைன், வர்த்தக செயலாளர் வில்பர் உள்ளிட்டோர் இந்தியா வருகின்றனர். டிரம்பின் வருகையை யொட்டி டெல்லியில் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
காந்தி நினைவிடம், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 26 மணி நேரம் டிரம்ப் டெல்லியில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு பத்தாயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லியில் தங்கவிருக்கும் ஐடிசி மவுரியா நட்சத்திர விடுதி தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த விடுதிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. அந்த நட்சத்திர விடுதியின் ஒவ்வொரு தளத்திலும் காவல்துறையினர் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். விடுதியை சுற்றி உள்ள உயரமான கட்டடங்களில் டெல்லி காவல்துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




