“சசிகலா விடுதலைக்காக பிரார்த்திக்கிறேன்..!” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அடுத்த ‘ஷாக்’ கருத்து!!
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேடைப்பேச்சானாலும் சரி, செய்தியாளர் சந்திப்பாக இருந்தாலும் சரி, அவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையாகி விடுகிறது. ஏட்டிக்கு போட்டியாக, ஏடாகூடமாக பேசுவதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல் உள்ளது அவருடைய விதண்டாவாத கருத்துக்கள்.

பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் முதல் நாள் நாங்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள் என்ற ரீதியில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வது போல் பேசினார். அதற்கு அடுத்த நாளே அதெப்படி பெரியாரை நாங்கள் விட்டுக் கொடுப்போம். ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பிளேட்டை திருப்பிப் போட்டார்.
அது மட்டுமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதிலும், பதிலடி கொடுப்பதிலும் ராஜேந்திரபாலாஜியின் ரகமே பகீர் ரகம்தான். காலை வெட்டுவேன், நாக்கை துண்டிப்பேன், தலை இருக்காது. அதிமுககாரன் எதற்கும் துணிந்தவன் என்ற ரீதியில் முகத்தை கோபமாக வைத்து ஆவேசம் காட்டுவார். இன்றுகூட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் எம்பி., கார் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக எங்களுக்கும் அடிதடி தெரியும் எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில் விருதுநகரில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என சசிகலா குறித்து தமது கருத்தை வெளிப்படுத்தி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் பெரியார் குறித்த ரஜினி கருத்தை பிடித்தவர்கள் ஏற்றுக் கொள்ளலாம். பிடிக்காதவர்களோ அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறி இன்று புதிய கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது என்ன தெரியுமா? பெரியார் குறித்து ரஜினி பேசியது தப்பு. ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது என்பதாகும். இப்படி மாறி, மாறி, ஏட்டிக்குப் போட்டியாக ராஜேந்திர பாலாஜி பேசுவது, மீடியாக்களுக்கும் நல்ல தீனியாகிவிட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




