செஞ்சி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டு கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி காணாமல் போன நிலையில் 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு பத்தாவது நாளாக தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான 20 நபர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனாலும் தற்போது வரை சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஆலம்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மலைப் பகுதிகள், கரும்பு தோட்டங்கள், நீர் நிலைகளில் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த கிராமங்களில் இந்த தேடுதல் பணி என்பது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 10 நாட்களை கடந்தும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





